ரஜினி – கமலிடம் ஆதரவு : நடிகர் சங்கத் தேர்தலில் வேகம் எடுக்கும் விஷால் அணி
நடிகர் சங்க களேபரங்கள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை சரத்குமார் அணியை எதிர்த்து விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்டோர் தனி அணியாக பிரிந்து போட்டியிடுகிறார்கள்.
விஷால் அணியில் இருப்பவர்கள் எல்லாம் தீயாய் வேலை செய்யக்கூடிய இளம் உறுப்பினர்கள் என்பதால் படப்பிடிப்பு பிஸியையும் தாண்டி தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று நடிகர் நாடக நடிகர்கள் உட்பட சங்க உறுப்பினர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழலில் தான் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தனது அணிக்கு ஆதரவு தருமாறு கேட்டிருக்கிறார் நடிகர் விஷால்.
அதேபோல நடிகர் கமல்ஹாசனிடம் தனது அணியினருடன் இணைந்து ஆதரவு கேட்டார் நடிகர் விஷால்.
கமலைப் பற்றி சரத்குமார் அணியில் உள்ள ராதாரவி சில வாரங்களுக்கு முன்பு தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்த நிலையில் விஷால் கமலை சந்தித்து ஆதரவு கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.