தெரு நாய்களுக்காக குரல் கொடுத்தது தப்பா..? : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

Get real time updates directly on you device, subscribe now.

vishal

கேரளாவில் நடிகர் மோகன்லால் தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்று சொல்ல, அடுத்த சில தினங்களில் சென்னையில் தெரு நாய்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டார் நடிகர் விஷால்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாயும்புலி ஆடியோ பங்ஷனில் எதையும் அரசியலாக்காதீர்கள்! நான் கேரளாவுக்கு எதிரியல்ல என்று பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷால்.

இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது :

“இங்கே நான் பாயும்புலி படத்தைப் பற்றி விரிவாகப் பேசப்போவதில்லை இங்கே வருகிற விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுக்கவில்லை. அதற்கு ஆகிற செலவுத்தொகையை இரண்டு ஏழை மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாக கொடுக்கலாம் என்றேன். அதை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார். அதன்படி வழங்கப்பட்டுள்ளது. பூங்கொத்து வாடிவிடும். கல்விக்கு உதவுவது, இரண்டு பேர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். உடனே நான் பூங்கொத்து தயாரிப்பவர்களுக்கு எதிரி போல பேச ஆரம்பிக்க வேண்டாம். ஏனென்றால் நான் எது பேசினாலும் அரசியலாக்கி திசை திருப்பி விடுகிறார்கள்.

Related Posts
1 of 65

நான் வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுத்தேன். தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதை அரசியலாக்கி விட்டார்கள். ‘பாய்க்காட் கேரளா’ வரை பேச ஆரம்பித்து விட்டார்கள். அரசியலாக்கி விட்டார்கள். நான் கேரளாவுக்கு எதிரியல்ல. எதையும் அரசியலாக்கி விட வேண்டாம். அடிமாடுகள் துன்புறுத்தப்படுவதற்கும் அப்படித்தான் குரல் கொடுத்தேன். விமர்சிக்கப்பட்டேன் வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுப்பது தவறா?

இங்கே மேடையில் பல பெரிய சாதனையாளர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் முதல்படம் ‘செல்லமே’ வந்தபோது என்னை முதன்முதலில் வாழ்த்தியவர் வைரமுத்து சார் தான். அவரது வாழ்த்து நம்பிக்கை ஊட்டியது. அதை என்றும் மறக்க மாட்டேன். எனக்கு சொத்தாக இருப்பது நண்பர்கள் தான். வேறு சொத்து எனக்கு இல்லை. அவர்கள் இல்லாமல் நானில்லை.

சினிமா என் தொழில் சினிமா என்தாய். அதற்கு பாதிப்பு வரும் போது நிச்சயம் எனக்குக் கோபம் வரும். அப்படித்தான் திருட்டுவிசிடிக்கு எதிராகப் போராடினேன். இதில் அரசியல் நோக்கமும் இல்லை, ஆர்வமும் இல்லை. விளம்பர நோக்கமும் இல்லை. என்னைப்போல எல்லாரும் நினைத்தால் சினிமா இன்னும் நன்றாக இருக்கும். ‘பாயும்புலி ‘படக்குழுவினருக்கும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி ”

இவ்வாறு விஷால் பேசினார்.