விஸ்வரூபம் ரிலீசுக்கு தடையில்லை, ஆனால்..?
கமல் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வந்தார் கமல்.
நாளை ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாக உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு, முதல் பாகத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இல்லை என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கும் கடந்த சில மாதங்களாக படத்தின் ட்ரெய்லர், சிங்கிள் பாடல், மேக்கிங் வீடியோ என அடுத்தடுத்த புரமோஷன் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தார் கமல். அப்படியிருந்தும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லாததை ஆச்சரியத்தோடு பார்க்கிறது கோலிவுட்.
ஆனால் அதற்கு காரணமே கமல் தான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் கட்சிப் பணிகள், ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு என கமல் பிஸியாக இருப்பதால் முதல் பாகத்துக்கு புரமோஷன் செய்தது போல இந்த இரண்டாம் பாகத்தின் புரோமோஷன் பணிகளை கமல் சரியாக மேற்கொள்ளவில்லை.
மேலும் நாளை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவே ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் மத்தியில் ‘விஸ்வரூபம் 2’ நாளை வருமா? வராதா? என்கிற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இன்னொரு புறம் முதல் பாகத்தை எடுத்த போது மிஞ்சிய காட்சிகளை வைத்துதான் இந்த இரண்டாம் பாகத்தை கமல் எடுத்திருக்கிறார். அதனால் இந்தப் படத்துக்கு புரமோஷன் செலவே தேவையில்லை என்று முடிவெடுத்ததும் போதிய வரவேற்பு இல்லாததற்கு காரணம் என்கிறார்கள்.
இதற்கிடையே ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால் கமல் ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
ஆக படம் ரிலீசாகத் தடை இல்லை என்றாலும், முதல் பாகத்துக்கு கொடுத்த வரவேற்பை இந்த இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுப்பார்களா? என்பது நாளை தான் தெரியும்.