அழகு குட்டி செல்லம் – விமர்சனம்
Rating : 3.5/5
குழந்தைகள் உலகத்தில் இருக்கும் பல பக்கங்களில் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கும் படம்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான ‘நீயா நானா’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர். அந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து திரையுலகில் தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கிறார்.
முதல் படமே ‘கமர்ஷியல்’ என்கிற லாப வட்டத்துக்குள் போகாமல், ஒரு நல்ல கருத்தை ரசிகர்களிடம் கமர்ஷியலாக சொல்ல வேண்டுமென்கிற உயர்ந்த நோக்கத்தோடு தயாரித்திருக்கிறார்.
குடும்பத்தில் குழந்தை என்கிற கதாபாத்திரம் எவ்வளவு தூரத்துக்கு முக்கியம்? அந்த குழந்தை ஐந்து விதமான குடும்பங்களில் எப்படியெல்லாம் வெவ்வேறு விதமாக கையாளப்படுகிறது? என்பதை நடக்கும் சம்பவங்கள் மூலமாகச் சொல்லி அதே குழந்தைகளால் எப்படி குடும்பத்தில் மாற்றங்கள் உருவாகிறது? என்பதை கிளைமாக்ஸில் ஒன்றோடு ஒன்று எந்த குழப்பமும் இல்லாமல் இணைத்து அழகான மாலை போல கோர்த்து தந்திருக்கும் படம் தான் இந்த ‘அழகு குட்டிச் செல்லம்’.
ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு நல்ல படத்தைப் பார்த்தை திருப்தியைத் தரும் படம். இது வருகிற ஆண்டுகளில் தொடர வேண்டும். அப்போது தான் தமிழிலும் நல்ல சினிமாக்கள் உருவாகும் நிலை தொடரும் என்ற நல்ல நோக்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.
கல்வி காசாகி வரும் சூழலில் நமது பள்ளியும் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ? என்று பயப்படும் பள்ளி தாளாளர் சுரேஷ் அதற்காக அந்தப் பள்ளிக்கு உதவி செய்து கொண்டிருக்கும் பெரிய மனிதரை கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிக்கு வரவழைத்து கவர நினைக்கிறார்.
அதற்காக மாணவர்களின் துணையுடன் கிறிஸ்து பிறப்பை நாடகமாகப் போட ஏற்பாடுகள் நடக்கிறது.
அவர் நினைத்தபடி நாடகம் நடந்ததா? இல்லையா? என்பதையே கூடுதலாக நான்கு குடும்பங்களில் குழந்தைகளால் நடக்கும் சம்பவங்களை ஒன்றுக்கொன்று பிண்ணி படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் கதை சிக்கலானது என்றாலும் ஒவ்வொரு குடும்பத்தின் கதையையும் மிக அழகாக காட்சிப்படுத்தி தான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சார்லஸ்.
படத்தில் இவர் தான் ஹீரோ என்று யாரையும் தனித்து சொல்லி விட முடியாது. வருகிற ஒவ்வொரு கேரக்டருமே மனதில் ஆழமாக பதிகிறார்கள்.
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு நான்காவதாக ஆண் குழந்தைக்கு ஏங்கும் கருணாஸ் ஆகட்டும், திருமணத்துக்கு முன்பே காதலனிடம் தன்னை பறிகொடுத்து விட்டு அவன் திருமணம் செய்ய மறுக்கும் போது தைரியமாக குழந்தையை பெற்றெடுத்து அவனுக்கு பாடம் புகட்டி திருந்த வைக்கும் நிலாவாகட்டும் எல்லா கதாபாத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு மன நிறைவைத் தருகின்றன.
பள்ளியில் நாடகம் போடுவதற்காக ஒரு நிஜ கைக்குழந்தையைத் தேடும் சிறுவர்களும், சிறுமிகளும் அவ்வப்போது பேசும் டயலாக்குகளும், செய்யும் குறும்புகளும் நல்ல ரசனை.
ஈழக் கதாபாத்திரங்கள் மட்டும் சோர்வைத் தந்தாலும் கைதட்டி பாராட்டி, சீராட்டி ரசிக்க நெறைய காட்சிகள் படத்தில் உண்டு.
வேத் சங்கர் சுகவனத்தின் பின்னணி இசையும் அந்த தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே..? என்ற பாடலில் இருக்கும் அமைதியும் ரம்மியமும் இசைக்கு மகுடம் சூட்டுகிறது.
விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவில் முழுப்படத்திலும் தெரிகிறது ஒரு உலக சினிமாவுக்குரிய உயரிய தரம்!
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சார்லஸ் குழந்தைகள் என்றாலே கடுப்பாகும் பெற்றோர்களுக்கு அதே குழந்தைகள் தான் எல்லாமே… என்கிற உண்மையை விறுவிறுப்பான திரைக்கதையால் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அழகு குட்டிச் செல்லம் – ஆசை தீர தூக்கிக் கொஞ்சலாம்!