ஆக்‌ஷனும் இருக்கும்; அதுல யதார்த்தமும் இருக்கும்! : ‘சத்ரியன்’ இயக்குநர் எஸ். ஆர் பிரபாகரன்

sr-prabhakaran

கோடிக்கணக்கில் கொட்டி எடுக்கின்ற படங்களில் கொட்டை எழுத்து சைசில் ஆயிரத்தெட்டு பிழைகளை ரசிகர்களால் ஈஸியாக அடையாளம் கண்டு விட முடிகிறது.

ஆனால் சில கோடிகளை கொட்டி எடுக்கின்ற படங்களில் படம் முழுக்க தேடிப் பார்த்தாலும் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சில தேர்ந்த இயக்குநர்கள்.

அந்த வகையறா தான் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இது டிவிடியால் சுட்ட கதை என்று டைட்டில் கார்டில் போடுகிற அளவுக்கு சொந்த சரக்கு குறைந்த இயக்குநர்கள் மத்தியில் தன்னைச் சுற்றி சமூகத்தில் நடக்கும் உண்மைச் சம்பவங்களையே தனது ஒவ்வொரு படத்தின் கதைக்களமாக்கிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

சசிக்குமாரின் பள்ளியிலிருந்து வந்தவருக்கு நேர்த்திக்கான வித்தையைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

Related Posts
1 of 6

முதல் படமாக சுந்தர பாண்டியனிலேயே அதை அவர் நிரூபித்து விட்டார். ஆனால் மூன்றாவது படமான விக்ரம் பிரபு, மஞ்சுமா மோகன் நடிப்பில் தயாராகியிருக்கும் சத்ரியன் படத்திலும் அந்த நேர்த்தியை விடாமல் தொடர்வது தான் ஆச்சரியம்.

ஆமாம் சார் என்னோட படங்கள்ல எல்லாமே ரொம்ப நேர்த்தியா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அப்படித்தான் இந்தப் படத்துல ஹீரோ விக்ரம் பிரபு, ஹீரோயின் மஞ்சுமா மோகன் செலெக்‌ஷன்ல இருந்து எல்லாவற்றையும் ரொம்ப நேர்த்தியா பண்ணிருக்கேன்.

இந்த சத்ரியன் படமும் உண்மைச் சம்பவங்களால் ஆன ஒரு கதை தான். எல்லோருக்கும் வாழ்க்கையில ஏதாவது ஒரு விஷயத்துல பெரிய ஆளா ஆகணும்னு ஆசை வரும். அப்படித்தான் இந்தப் படத்துல ஹீரோ திருச்சியையே தன்னோட கைக்குள்ள வைக்கணும்னு ஆசைப்பட்டு ரவுடியாக ஆசைப்படுகிறார். அதனால அவரோட வாழ்க்கை என்னவா ஆனதுங்கிறது தான் படமே என்றவர் அதற்காக திருச்சியில் பிரபல தாதாக்கள் சிலரிடம் அவர்களின் வாழ்க்கையை சொல்லக் கேட்டு மனப்பாடம் செய்து விட்டு வந்தாராம்.

பொதுவாக ஹீரோ ரவுடி என்றால் ஹீரோயின் ரொம்ப நல்ல பொண்ணா இருக்கும். ஆனால் இதில் ஹீரோயின் மஞ்சுமா மோகனும் இன்னொரு ரவுடியின் மகள் தானாம்.

படத்துல ஆக்‌ஷனும் இருக்கும், ஆனா அதுல கூட யதார்த்தம் மீறாம குடும்பத்தோட சேர்ந்து பார்க்கக்கூடிய வகையில இருக்கும் என்ற எஸ்.ஆர்.பிரபாகரன் விக்ரம் பிரபு சார் திறமையான நடிகர் மட்டுமல்ல, ஒரு பக்காவான ஆக்‌ஷன் ஹீரோவும் தான். அவருக்கான நல்ல கதைகள் அமைஞ்சா அவரும் மாஸ் ஹீரோ தான் என்றார்.

அதற்கு பிள்ளையார் சுழியாக அமையட்டும் இந்த ‘சத்ரியன்’!