குடும்பப் பாங்கான கதையாம்… ஜூலி தான் ஹீரோயினாம் : ஆவலோடு காத்திருக்கும் நடிகர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலியானாவை விஜய் டிவி தன்னுடைய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தது.
முதல் நாளிலேயே தலையில் துண்டை கட்டிக் கொண்டு தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றெல்லாம் சீன் காட்டியவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போனவுடனேயே நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. அதோடு இதுதான் என்னுடைய முதல் கேமரா நிகழ்ச்சி என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் அவரைப் பற்றிய உண்மையான தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
குறிப்பாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்துள்ள விஷயம் வெட்ட வெளிச்சமாகியதால் அவருக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களே அவருக்கு எதிராகத் திரும்பி வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதோடு பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் நடந்து கொள்ளும் விதங்களும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்ததோடு ஓவியாவுக்கும், அவருக்குமான பஞ்சாயத்து இன்றுவரை தீர்ந்தபாடில்லை. இதனால் ஓவியாவின் ரசிகர்களும் ஜூலியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இப்படி ஜூலியின் பெயர் முழுமையாக பொதுவெளியில் நாறிக்கிடக்கிற நிலையில் நான் தயாரிக்கப் போகும் புதுப்படத்தில் ஜூலியை நாயகியாக்கப் போகிறேன் என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகர் கூல் சுரேஷ். பல படங்களில் பலவித கேரக்டர்களில் நடித்திருக்கும் கூல் சுரேஷ் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?

அவரே சொல்கிறார் கேளுங்கள்…
”நான் நேசிக்கும் சினிமாவில் முதல்முறையாக நான் தயாரிப்பாளராகிறேன். என்னுடைய படத்தில் ஹன்சிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை காட்டிலும் குறுகிய காலத்தில் புகழ்பெற்றவர் ஜூலி. அதனால் சகோதரி ஜூலியை என்னுடைய படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளோம். கதாநாயகனாக புதுமுகம் ஒருவர் நடிப்பார்
வெற்றி பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இது ஒரு குடும்ப பாங்கான கதை என்பதால் ஜூலியை தேர்ந்தெடுக்க நானும் இயக்குநரும் முடிவு செய்துள்ளோம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அவர் வெளியே வந்ததும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். பின்னர் விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்படும். எங்கள் படத்துக்கு உங்களுடயை ஒத்துழைப்பு தேவை” இவ்வாறு கூறியிருக்கிறார்.
இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்காங்களோ?