ரஜினியின் அரசியல் வாரிசு! – தனுஷின் பலே திட்டம்
இதுநாள் வரை நடிப்பில் பிஸியாக இருந்து வந்த தனுஷ் தனது ரசிகர் மன்ற நடவடிக்கைகளில் அவ்வளவாக தீவிரம் காட்டியதில்லை. ஒரு தடவை கூட ரசிகர் சந்திப்பு கூட்டத்தை நடத்தியதும் இல்லை.
இப்படி சைலண்ட்டாக இருந்த தனுஷ் கடந்த சில வாரங்களாகவே தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.
அதன் முதல் கட்டமாக ரசிகர் மன்றத்துக்கு தலைவராக இயக்குனர் சுப்ரமணிய சிவாவை நியமித்திருக்கிறார். இவர் தனுஷை வைத்து ‘திருடா திருடி’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தவர். அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பிறகு ஆலோசனைகள் உள்ளிட்ட விஷயங்களில் தனுஷின் நிழலாகவே அவருடன் இருந்து வருகிறார்.
தனுஷின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு ரஜினியின் அரசியல் எண்ட்ரி தான் காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ரஜினிக்கு ஆண் வாரிசு இல்லை. இளைய மகள் செளந்தர்யாவின் கணவரும் அவரிடமிருந்து விவகாரத்து வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டார். தற்போது ஆண் வாரிசு இடத்தில் மருமகன் தனுஷ் மட்டும் தான் இருக்கிறார்.
இதனாலேயே விரைவில் ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்க இருக்கிறார் என்று பேசப்படும் சூழலில், அவருடைய அரசியல் வாரிசாக தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளவும், எதிர்காலத்தில் அந்தக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவுமே இப்படி ஒரு தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் தனுஷ்.
எந்தப்பட விழாவாக இருந்தாலும் அதிகம் பேசாத தனுஷ் ‘காலா’ பட விழாவில் ஒரு அரசியல்வாதி பேசுவது போல மேடையில் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஒருவேளை தனுஷ் அரசியலில் இறங்கினால் அது ரஜினி வீட்டின் குடும்ப அரசியலாகத்தான் தமிழக மக்களால் பார்க்கப்படும்.
ஏற்கனவே ஒரு குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய தமிழக மக்கள் ரஜினி வீட்டின் குடும்ப அரசியலை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.