ஹீரோ அவதாரமெடுத்த யோகிபாபு! – ஏன் பாஸ் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு..?
வடிவேலு வி.ஆர்.எஸ் கொடுத்தவுடன் தமிழ்சினிமாவில் வடிவேலு ஏரியாவை நிரப்ப ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ”இவரு பரவாயில்லப்பா… கொஞ்சமாச்சும் சிரிக்க முடியுது…” என்று ரசிகர்களால் முக்கால்வாசி ஏற்றுக் கொள்ளப்பட்டவர் காமெடி நடிகர் யோகிபாபு.
படங்களில் அவர் அடிக்கும் டைமிங் வசனங்கள் சிரிப்புக்கு உத்தரவாதம் தரக்கூடியவை. அதிலும் நயன்தாராவுடன் அவர் இணைந்து நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ஹீரோ இல்லாத குறையை அவர் தான் போக்கினார்.
இப்படி காமெடி நடிகராக மெல்ல மெல்ல வளர்ந்து வரும் யோகிபாபுவுக்கு யார் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை? காமெடியனாக சாதிப்பதற்குள் சைலண்ட்டாக ஹீரோ அவதாரமெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
என்ன ஹீரோவா நடிக்கிறீங்களாமே? என்று கேட்கும் போதெல்லாம் அதெல்லாம் இல்லேண்ணா… என்று சத்தியம் செய்யாத குறையாக சிரித்துக் கொண்டே மறுப்பவர் ஏற்கனவே ‘கூர்கா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது தர்மபிரபு என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தால் வடிவேலு நடிப்பில் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களின் சாயல்களில் இருக்கிறது.
விமலை வைத்து ‘கன்னிராசி’ என்ற படத்தை இயக்கி வரும் முத்துக்குமரன் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் சிரிக்க வைக்கும் விதமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாகிறது.
ஏன் பாஸ் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு..?