Exclusive எடிட்டர் கிஷோருக்கு 3.5 லட்சம் சம்பள பாக்கி : பிரகாஷ்ராஜ் இப்படி செய்யலாமா? – தந்தை கண்ணீர்

Get real time updates directly on you device, subscribe now.

prakash-raj

”விசாரணை” படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது என்று தமிழ்சினிமாவே கொண்டாடுகிறது.

அதில் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது அப்படத்தின் எடிட்டரான மறைந்த திரு.கிஷோர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விருது அறிவிப்பு வந்தவுடன் ‘விசாரணை’ படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குறிப்பாக கிஷோருக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றார்கள்.

இப்படி விருது வாங்கிய எல்லோர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடினாலும், கிஷோரின் 73 வயது தந்தை தியாகராஜனுக்கு மட்டும் கண்ணீரே தினசரி வாழ்க்கையாக மாறியிருக்கிறது.

”என் மகன், தேசிய விருது பெற்றவர் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் சினிமாவில் சாதிக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்த என் மகன், ஏமாற்றப்பட்டு விட்டான்; இன்று எங்களுக்கு உதவ யாருமே இல்லை, நாங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

இது குறித்து நாம் அவரை தொடர்பு கொண்டபோது மனம் முழுக்க வேதனையோடு பேசினார்….

”என் மகன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிப்புடன் வேலை பார்த்தான்; சாதனைகளையும் படைத்தான். ஆனால் இந்த சினிமா எங்களுக்கு சோறு போடவில்லையே?

நாங்கள் வசித்த வீட்டை இடித்து விட்டு புதிய வீட்டு கட்ட, என் மகன் பூமி பூஜை போட்டான். ஆனால் அவன் இறந்து விட்டதால், அந்த வேலை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அந்த வீட்டை கட்டி முடிக்க, 21 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

Related Posts
1 of 40

என் மகன், தேசிய விருது பெற்றவர் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதே சினிமாவால் தான், வயதான காலத்தில் நாங்கள் கஷ்டப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். என்றவர் அடுத்து சொன்னது தான் பேரதிர்ச்சி!

Thiyaga Rajan
எடிட்டர் கிஷோரின் தந்தை தியாகராஜன்

என் மகன் தயாரிப்பாளரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் படங்களில் எடிட்டராக வேலை செய்தார். அந்த வேலைக்கு 3.5 லட்சம் ரூபாய் வரை சம்பள பாக்கி வர வேண்டியிருக்கிறது. இன்று வரை அந்த சம்பள பாக்கியை தர பிரகாஷ்ராஜ் விருப்பம் காட்டவில்லை; பலமுறை முயற்சித்தும் என்னால் அந்த பணத்தை அவரிடம் வாங்கவே முடியவில்லை.

தற்போது கூட அவர் ”யாக்கை” என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் இயக்குநர் மூலமாகக் கூட நான் கேட்டுப் பார்த்தேன். அவ்வளவு ஏன் இயக்குநர் வெற்றிமாறன் சாரிடம் கூட இதைப்பற்றி பேசினேன். அப்படியும் கூட சம்பளப் பாக்கியை பிரகாஷ்ராஜிடம் வாங்க முடியவில்லை.

என் மகன் உயிரோடு இருந்த போது பிரகாஷ்ராஜ் சாரைப்பற்றி பெருமையாகப் பேசுவான். அவரது ஹைதராபாத் வீட்டுக்கெல்லாம் அவனை கூட்டிச் சென்றிருக்கிறார். இப்படி அவன் மீது பாசமாக இருந்தவர் எதற்காக சம்பள பாக்கியை தர மறுக்கிறார் என்று தெரியவில்லை. அதை கொடுத்தால் எங்களுக்கு  பேருதவியாக இருக்கும்.

தனுஷும், வெற்றிமாறனும் மட்டும் தான் இன்றுவரை எங்களுக்கு நிறைய உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் பிரகாஷ்ராஜும் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் எங்களை ஏமாற்றி விட்டார்” என்று கண்ணீர் மல்க கூறினார் தியாகராஜன்.

திரைத்துறையில் சைலண்ட்டாக பலருக்கு உதவி செய்யும் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கூட ஆந்திராவில் உள்ள ஒரு நலிந்த கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தின் முன்னேற்றத்துக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இப்படி உதவும் உள்ளம் கொண்ட அவர் கிஷோரின் சம்பள விஷயத்தில் மட்டும் தொடர்ந்து பாராமுகமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இனியாவது தாமதிக்காமல் பிஅந்த சம்பள பாக்கியை கொடுத்து விடுங்களேன் பிரகாஷ்ராஜ் சார்.

பின் குறிப்பு : எடிட்டர் கிஷோர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ”பயணம்”, ”தோனி”, ”உன் சமையலறையில்” ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக வேலை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.