வாகா – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

wagha-review-3-1

RATING : 2.5/5

வீட்டுக்குள் நாம் எந்த தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக உறங்கி எழுகிறோம் என்றால் அதற்கு எல்லையில் தூக்கத்தை தொலைத்து காவல் காக்கிற ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த பாதுகாப்பு தான் பிரதானம்.

இப்படி இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்துகிற படமாகத்தான் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன். அதற்காக திரைக்கதையை கையாண்டிருக்கிற விதம் தான் ‘டாஸ்மாக் சரக்கை’ உள்ளே தள்ளியது மாதிரி மட்டையாகிக் கிடக்கிறது!

கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் ராணுவத்தில் சேருவது என்பது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். தன் நாட்டை பாதுகாக்கப் போகிறோம் என்கிற பெருமிதத்தோடு செல்வார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ விக்ரம் பிரபு எதற்காக ராணுவத்தில் சேர்கிறார் தெரியுமா?

”ராணுவத்தில் எப்போது வேண்டுமானாலும் சரக்கடிக்கலாம்” என்கிற கேவலமான காரணத்துக்காக சேர்கிறார்.

ஊரில் அப்பா நடத்தும் மளிகைக் கடையில் வேலை பார்க்கப் பிடிக்காமல் ராணுவத்தில் சேர்கிற விக்ரம் பிரபுவுக்கு போன புதிதில் அவரை சுற்றியிருக்கிற தனிமை வெறுமையாகத் தெரிகிறது. அந்த வெறுமையில் மனம் நொந்து போகிற சமயத்தில் தான் தேவதைப் போல அவர் கண்களில் படுகிறார் நாயகி ரன்யா ராவ்.

ராணுவத்துக்கு போனவர் ரன்யாவே கதியாகி அவர் பின்னால் சுற்றுகிறார். ஒரு கலவரத்தில் ரன்யா பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்று தெரிய வரவும் பேரதிர்ச்சி.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிலிருக்கும் அவளது வீட்டுக்கு பாதுகாப்பாக கொண்டு போய் விடப்போகும் விக்ரம் பிரபு இந்தியா எங்கள் எதிரி நாடு என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய ராணுவ வீரர்களை பிரித்து மேயும் பாகிஸ்தான் ராணுவத்தின் சித்திரவதை கூடத்தில் மாட்டிக் கொள்ள, அவர்களின் அத்தனை தோட்டாக்களையும் அசால்ட்டாக தட்டி விட்டு காதலியோடு எப்படி இந்தியா வந்து சேர்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

படத்துக்கு ‘வாகா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க முழுக்க காஷ்மீர் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடக்கிறது. கதைக்கும், டைட்டிலுக்கு அப்படி ஒரு ஒட்டாத பொருத்தம்!

கிளைமாக்ஸில் பல கிலோ மீட்டர்கள் நாயகியை தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்குள் களைத்துப் போகிற அளவுக்கு ஓடித் தீர்க்கிறார் விக்ரம்பிரபு. வருகிற எல்லாத் தோட்டக்களில் குறியிலிருந்தும் அசால்ட்டாக தப்பிப்பதெல்லாம் அக்மார்க் சினிமாத்தனம்.

Related Posts
1 of 47

நடனத்திலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும், ராணுவ கம்பீரத்துக்கும் அவருடைய உயரமான உடல்வாகு ரொம்பவே கை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் காதலே கதியென்று கிடப்பவர் கருத்து சொல்லி திருத்துவதெல்லாம் டூ மச் என்பது தான் ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட்!

அச்சு அசல் பாகிஸ்தான் பெண் போலவே இருக்கிறார் நாயகி ரன்யா ராவ். தமிழில் வசனங்களை உச்சரிப்பதில் லிப் மூவ்மெண்ட்டை சரியாகக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே ஒளிப்பதிவாளர் அவருக்கு அதிகம் குளோசப் காட்சிகளை விட்டு வைத்திருப்பார் போல…

காமெடிக்காக கருணாஸை இறக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால் சிரிக்கத்தான் முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக வரும் ஷாஜி செளத்ரி தான் படத்தில் வில்லன், முக்கிக் கொண்டு அவர் சீரியஸாக பேசுகிற வசனங்கள் எல்லாமே ”அப்பு… இதையெல்லாம் நாங்க விஜயகாந்த், அர்ஜீன் படங்கள்லேயே பார்த்தாச்சு” என்று தான் சொல்லத் தோன்றுகிறது!

”நான் பாகிஸ்தானியை காதலிக்கலை. நான் காதலிச்ச பொண்ணு பாகிஸ்தானி.”, ”பயத்தை சாகடிக்கிறதுக்கு தேவை தான் நம்பிக்கை” என வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாரின் பிரம்மாண்டமான ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் கனகச்சிதமாக அமைந்தும், விறுவிறுப்பே இல்லாத திரைக்கதையில் எதை ரசிப்பது?

வேலி தாண்டி செல்லும் ஆட்டுக்குட்டியைக் கூட சுட்டுத் தள்ளும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் போன பேருந்தை மறித்து இந்தியர்கள் கலவரம் செய்யும் போது எல்லையில் இருக்கிற பாகிஸ்தான் ராணுவத்தினர் எங்கே சென்றார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.

இப்படி படத்தில் பார்த்து சந்தேகம் கேட்க சில ஓட்டைகளை வெளிப்படையாக விட்டிருக்கிறார் இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன்.

இன்றைக்கும் கிராமத்துப் பக்கம் போய் அங்குள்ள இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள். இந்திய ராணுவத்தில் வேலை செய்வதை பெருமிதத்தோடு பேசுவார்கள்.
அந்த பெருமிதம் இயக்குநரின் சிந்தனையில் துளியளவும் இல்லை.

படத்தை பார்த்து விட்டு வெளியே வருகிற ஒவ்வொரு ரசிகனிடமும் ‘ஹரிதாஸ்’ எடுத்த இயக்குநரோட படமா இது? என்கிற கேள்வி எழுகிறது

இந்த கேள்விக்கான சரியான பதில்தான் படத்தில் இல்லாமலேயே போய் விட்டது!

வாகா – நிறைவில்லா எல்லை!