இறைவி விமர்சனம்

RATING : 3.8/5
பெண் எப்போதுமே ஆணுக்கு அடிமை இல்லை. ஆண் குலத்தை நம்பி வாழ்க்கையை வீணடித்ததெல்லாம் போதும். உனக்கான வாழ்க்கையே நீயே முடிவு செய்து கொள், இனியாவது முழித்துக் கொள் என் பெண் இனமே… என்று பெண்கள் உலகை இன்னொரு புதிய கோணத்தில் சொல்கிற படம் தான் இந்த ‘இறைவி’.
நான்கு வெவ்வேறு காலகட்ட பெண்களின் வாழ்க்கையும், அவர்களின் வாழ்க்கை ஆண்களால் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது என்பதையும் கமர்ஷியல் வட்டத்திலிருந்து விலகி சற்றே ‘நீளமான’ படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரிலீசுக்கு முன்பே கேட்டுக் கொண்டதன் பேரில் படத்தின் கதையைப்பற்றி நாம் இங்கே சொல்லப்போதில்லை. அதைத்தாண்டி திரைக்கதை, காட்சியமைப்பு, நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றை பற்றி மட்டுமே அலசுவோம்.
ரம்மியமான மழைக்காட்சியோடு துவங்குகிறது படம்.
‘மழை நல்லா இருக்குல்ல…’
‘ஹிம்ம்… நல்லாத்தான் இருக்கு.’
‘நனையலாமா?’
‘நனையலாம் ஆனா நனைஞ்சிருவோமே…’ என்கிற வசனத்தோடு நகர்கிறது படத்தின் அடுத்தடுத்த காட்சிகள்.
நடிப்பென்று வந்து விட்டால் பின்னி பெடலெடுக்கிற எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் ‘பிடிங்க… பூங்கொத்தை’ என்று சொல்ல வைப்பது எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டரும் அதில் அவர் நிரப்பித் தந்திருக்கின்ற நடிப்பும் தான்!
எடுத்த வைத்த படம் ரிலீசாகாமல் அவர்படும் வேதனையும், அதை நினைத்து நினைத்தே சதா எந்த நேரமும் குடித்து குடித்து குடும்பத்தின் நிம்மதி தொலைவதும், கணவணின் நிலையை நினைத்து மனைவி கமலினி முகர்ஜி குலுங்கு குலுங்கி அலுவதுமான காட்சிகள் மனசை என்னவோ செய்கின்றன.
”போதும்பா… இந்தப் படத்தை மறந்துட்டு அடுத்த படம் பண்ணப்போ…” என்று கமலினி முகர்ஜி சொல்லும் போது ”முடியாதும்மா… இது பிரசவம் மாதிரி… நம்ம குட்டிம்மா வயித்துல இருக்கும் போது வேணாம் அடுத்த குழந்தையை பெத்துக்கலாம்னு சொல்ற மாதிரிம்மா” என்று பேசுகிற காட்சியில் ஒரு இயக்குநரின் வலியை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
யதார்த்த நடிப்புக்கு சொந்தக்காரரான விஜய் சேதுபதி இதிலும் அதில் கடுகளவு குறையாத நடிப்பைவழங்கியிருக்கிறார். இன்னொரு பெண்ணுடன் தொடர்பை வைத்துக் கொண்டு விட முடியாமல், அதே சமயம் தனது மனைவியையும் குற்ற உணர்வுடன் நெருங்குவதும், பெற்ற குழந்தையே தன்னை அங்கிள் என்று அழைக்கிற காட்சியில் வெளிப்படும் வேதனையும் அபாரம்.
காதலித்து கட்டிக்கொண்ட கணவன் இறந்து விட்டால் வாழ்க்கை அவ்வளவு தானா அதெல்லாம் இல்லை எனக்கான வாழ்க்கையை நானே முடிவு செய்து கொள்கிறேன் என்று விஜய்சேதுபதியுடன் தவறான உறவை வைத்துக்கொள்ளும் துணிச்சல்(?) பெண்ணாக வருகிறார் பூஜா தேவரியா.
இன்னார் கையில் சிக்கினால் இந்த சிலை நல்ல வடிவம் பெறும் என்பது தான் பாபி சிம்ஹாவின் நிலை போலிருக்கிறது. ‘ஜிகர்தண்டா’வுக்குப் பிறகு அதே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு நல்லஸ்கோப் உள்ள வில்லன் கேரக்டர்.
ஒரு பெண்ணுக்காக நட்புக்கு துரோகம் செய்கிற அவருடைய கேரக்டருக்கு இயக்குநர் கொடுக்கும் தண்டனை மிகச்சரி.
கார்த்திக் சுப்புராஜின் படங்களில் வரும் கருணாகரன், காளி வெங்கட் என அத்தனை பேரும் இந்தப் படத்திலும் வந்து போகிறார்கள்.
ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அஞ்சலி ஆயிரம் கனவுகளுடன் விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்கிற ஒரு நடுத்தரப் பெண்ணின் கனமான கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார்.
ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தலைவராக வருகிறார் ராதாரவி. முதலில் மனைவியை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பதும், வயசான காலத்தில் படுத்த படுக்கையில் இருக்கும் மனைவியை பக்கத்தில் இருந்து தாங்குவதும் என பல குடும்பத்தலைவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் மழைக்காட்சிகள் மனசை லேசாக்குகின்றன.
சந்தோஷ் நாராயணனின் இசையில் அங்கங்கே இளையராஜாவின் பாடல்களை பின்னணியில்ஓடவிட்டு ஒப்பேற்றுகிறார். பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் பின்னணி இசையில் சில நல்ல வசனங்களையே கேட்க முடியாத அளவுக்கு இம்சிக்கிறார்.
பெண்ணைப் பற்றி சொல்வதானால் மணிக்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம் தான்.அதற்காக ரெண்டே முக்கால் மணி நேரத்துக்கு படத்தை ஜவ்வாக இழுக்க வேண்டுமா கார்த்திக் சுப்புராஜ்?
ஒரு அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பும் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கையும் கொடுப்பதே தயாரிப்பாளர் என்கிற வர்க்கம் தான். அப்படிப்பட்ட தயாரிப்பாலர் வர்க்கத்தை இவ்வளவு கேவலமாக சித்தரிக்க வேண்டுமா? ( ஜிகர்தண்டா தயாரிப்பாளர் மேல் உள்ள கோபமோ?)
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே இப்போதைய ஹாலிவுட் ட்ரெண்ட். அந்த லெவலுக்கு தமிழ்சினிமா போக வேண்டுமென்றால் முதலில் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும்.
சின்ன சின்ன விஷயங்களை கூட தெளிவாக காட்சிப்படுத்த ஆசைப்பட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதீத வன்முறை, குடிபோதை, மெதுவாக நகரும் காட்சிகள் குறைகளை தவிர்த்திருக்கலாம்.
என்றாலும் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் காட்ட வேண்டுமென்கிற அவருடைய புதுப்புது சிந்தனைகளுக்காக இந்த ‘இறைவி’யை ரசிக்கலாம்.
இறைவி – ஆண் இனத்துக்கான பாடம்!