கே ஜி எஃப் – விமர்சனம் #KGF
RATING – 3.5/5
நடித்தவர்கள் – யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ் மற்றும் பலர்
இசை – ரவி பஸ்ரூர், தனிஷ்க் பாக்ச்சி
ஒளிப்பதிவு – புவன் கவுடா
வகை – நாடகம், ஆக்ஷன், சரித்திரம்
சென்சார் பரிந்துரை – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 50 நிமிடங்கள்
பிரபலமான கோலார் தங்க வயலை கதைக்களமாக வைத்து அதிகப் பொருட்செலவில் கன்னடத்தில் தயாராகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டிருக்கும் படம் தான் இந்த ‘கே.ஜி.எப்’.
ஒரே நாளில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான படம் என்கிற பெருமையையும் பெற்றிருக்கும் இப்படம் எப்படியிருக்கிறது என்பதை பார்ப்போம்.
பணம் தான் இங்கே எல்லாமும், அது இல்லையென்றால் நம்மை யாரும் மனிதனாக மதிக்க மாட்டார்கள்.
என்று சிறு வயதில் சொல்லி விட்டு இறந்து விடுகிறார் ஹீரோ யாஷின் தாய். அன்று முதல் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டு வளர்பவர் மும்பைக்குச் சென்று தாதா ஒருவரிடம் வேலைக்கு சேர்கிறார். அடித்தால் தான் இங்கு காசு கிடைக்கும் என்று முடிவு செய்பவர் ஆளும் வளர, மும்பையும் அவருடைய கட்டுப்பாட்டில் வருகிறது.
இதற்கிடையே கோலார் தங்க வயலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ருத்ராவை தீர்த்துக் கட்டி விட்டு அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள் அவரது தொழில் பார்ட்னர்கள்.
அதற்காக ருத்ராவை தீர்த்துக் கட்ட யாஷை கோலார் தங்க வயலுக்குள் அனுப்புகிறார்கள். அங்கேயோ பல நூற்றுக்கணக்காக மக்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதை பார்க்கிறார் யாஷ். அவர்களை காப்பாற்ற நினைக்கும் அவருடைய முயற்சி ஜெயித்ததா? கோலார் தங்க வயல் யார் கைவசம் வந்தது? என்பதே மீதிக்கதை.
கிளைமாக்ஸில் இனிமே தான் கதையே ஆரம்பிக்கப் போகிறது என்பதோடு நிறைவடைகிறது படம். ஆக, பாகுபலியைப் போல இந்தப்படமும் மூன்று பாகங்கள் வரும்போல் தெரிகிறது.
முரட்டு ஆசாமியாகத் தெரிந்தாலும் தலை முடியைக் கோதி விட்டு அவர் காட்டும் மாஸ் தியேட்டரை அதிர வைக்கும். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் பின்னிப் பெடலெடுக்கிறார்.
முழுக்கதையும் ஹீரோ யாஷை மையப்படுத்தியே நகர்வதால் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை.
வில்லன்களாக வருபவர்கள் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவரும் உடல் வாகுவிலும், பார்வையிலும் பார்ப்பவர்களை பயமுறுத்துகிறார்கள்.
ரவி பஸ்ரூர், தனிஷ்க் பாக்ச்சி இருவர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் பிரம்மாண்டப் படத்துக்குரிய மிரட்டலை கேட்க முடிகிறது. புவன் கவுடாவின் ஒளிப்பதிவில் கோலார் தங்க வயல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுகிறது.
தெலுங்கில் ஒரு ‘பாகுபலி’ போல கன்னடத்தில் ஒரு கே.ஜி.எப் என்கிற தனித்துவமான அடையாளத்துக்காக இந்தப் படத்தை அதிக மெனக்கிடலோடு திரைக்கதை அமைத்ததோடு, இயக்குனர் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும்? என்று பார்ப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டிய விதத்தில் ஜெயித்திருக்கிறார் பிரஷாந்த் நீல்.