கோ 2 – விமர்சனம்
RATING : 3/5
திணற திணற நடித்துக் கொட்டுவதில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா இரண்டு பேருமே சளைத்தவர்கள் இல்லை. இந்த இருவரும் ஒரே படத்தில் நடிப்பதைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அது எப்படிப்பட்ட ரகளையான ரசனையாக இருக்கும்.
அந்த சந்தர்ப்பத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கும் படம் தான் இந்த ‘கோ 2’.
அனாதையான ஹீரோ பாபி சிம்ஹாவை ஆளாக்கி சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்ட சமூக சேவகரான நாசரையும் அவரது மகனான கருணாகரனையும் தனது சுய லாபத்துக்காக தீர்த்துக் கட்டுகிறார் அமைச்சரான இளவரசு.
மீடியாவில் இருந்தும் கூட அமைச்சர் செய்த குற்றத்தை வெளிக்கொண்டு வர முடியாமலும், அதற்கான சரியான தண்டனை கிடைக்காத ஆத்திரத்திலும் இருக்கும் பாபி பதவியை வைத்துக் கொண்டு ஆட்டம் போடும் அமைச்சர் இளவரசுவுக்கு பாடம் புகட்டவும், அவரது அயோக்கியத்தனை வெளிச்சம் போட்டு காட்டவும் முடிவெடுக்கிறார்.
அதற்காக மாநில முதல்வரான பிரகாஷ்ராஜை கடத்துகிறார். அமைச்சர் செய்த அயோக்கியத்தனத்துக்கு ஏன் பாபி சிம்ஹா முதல்வரை கடத்துகிறார்? முதல்வர் பாதுகாப்பாக பாபி சிம்ஹாவிடமிருந்து தப்பித்தாரா? என்பதே இந்த ‘கோ 2’.
தனியார் டிவி சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் பாபி சிம்ஹா இதில் அகிம்சை வழியில் போராடும் ஹீரோவாக வருகிறார். ஜிகர்தண்டாவின் ‘அசால்ட்’ வில்லனாக பார்த்து விட்டவரை இப்படி அமைதியாக பார்ப்பது ரசிகர்களுக்கு புது ரசிப்பு அனுபவமாக இருக்கும்.
பாரதியார் கவித சொல்வது முதல் நல்ல தமிழை சிரமப்பட்டு உச்சரிப்பது வரை கொஞ்சம் தெலுங்கு வாடை வந்தாலும் அதை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார் பாபி சிம்ஹா.
நடிப்பில் கெட்டிக்காரர் தான். ஆனால் ரொமான்ஸிலும், டான்ஸிலும் மனுஷன் கஷ்டப்படுவது கண்கூடாகவே தெரிகிறது.
நாயகியாக வரும் நிக்கி கல்ராணி பாடல் காட்சிகளில் அழகுப் பதுமையாக வருகிறார். நடிப்புக்கு தீனி போடுகிற அளவுக்கு காட்சிகள் இல்லை என்றாலும் அதுவே போதும் என்றாகி விடுகிறது சில காட்சிகளில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்கள்.
காமெடிக்கு கேரண்டு தருகிறார் அமைச்சரின் மகனாக வரும் பால சரவணன். போலீஸ் விசாரணையில் தளபதி, காதல் தேசம் படக்காட்சிகளை கலந்து சொல்லி தப்பிக்கும் அவரது சாமர்த்தியம் செம கலாட்டா!
முதல்வராக வரும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வழக்கமான மிரட்டல் தான். ஆனால் அவரை விட நடிப்பில் எஸ்க்ட்ராவாக ஸ்கோர் செய்வது அமைச்சராக வரும் இளவரசு தான். முதல்வருக்கு விசுவாசியாக இருந்து கொண்டே அவருடைய முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு செய்யும் தில்லு முல்லு கை தட்டல் ரகம்!
சீரியஸ் போலீசாக வரும் ஜான் விஜய் பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் கருணாகரன் கண்கலங்க வைத்து விடுகிறார்.
பிலிப் ஆர்.சுந்தர் – வெங்கட் என் இன் ஒளிப்பதிவும், லியோன் ஜேம்ஸ்சின் இசையும் படத்தின் வேகத்துக்கு பக்க பலம்.
மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசிக்கப்பட்ட கதையெல்லாம் இல்லை. பதவியை வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்த அமைச்சர் ஒருவரின் வண்டவாளங்களை மாநிலத்தின் முதல்வரை கடத்தி வைத்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே படம் என்று இரண்ரே வரியில் அடங்கி விடுகிற கதைக்களம் தான்.
ஆரம்பக் காட்சியே முதல்வரை கடத்துவது போல காட்டி விட்டு, அடுத்தடுத்து ரொமான்ஸ் – காமெடி என இடைவேளை வரைக்கும் இயக்குநர் ட்ராக்கை மாற்றி காட்சிகளை ஜவ்வாக இழுக்கிறார். இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையின் வேகம் சூடு பிடிக்கிறது.
கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தி படத்தை நீக்க கோரிக்கை வைப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் மத்திய மாநில அரசுகளை கேள்விகளால் துளைத்தெடுப்பது, டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசாங்கமே நடக்கிறது என ஆளும் அரசு செய்யும் மக்களுக்கு எதிரான விஷயங்களை தைரியமாக காட்சிப்படுத்தியிருப்பதற்கும் இயக்குநர் சரத்தை மனசார பாராட்டலாம்.
இப்போ இருக்கிற இளைஞர்களோட புரட்சி எல்லாம் ஃபேஸ்புக்ல எத்தனை லைக்ஸ் வாங்கினோம்னு பார்க்கிறதோட முடிஞ்சு போயிடுது போன்ற பாக்கிய ராஜ் – ராஜா ராம் இருவரின் சம்மட்டியடி வசனங்கள் கூடுதல் விறுவிறுப்பு.
பரபரப்பான இந்த தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்க வேண்டிய ‘நறுக்’ ‘சுறுக்’ கேள்விகள் அத்தனையையும் தைரியமாக கேட்கிறது இந்தப்படம்.
கோ 2 – தேர்தல் ஸ்பெஷல்!