14 லட்சம் இழப்பீடு கேட்டு கிருஷ்ணசாமி மீது வழக்கு! : களத்தில் இறங்கிய ‘கொம்பன்’ தயாரிப்பாளர்

Get real time updates directly on you device, subscribe now.

KOMBAN

தர்சட்டைகளின் திரையுலக அத்துமீறல்களுக்கும், அடாவடிகளுக்கும் யாராவது ஒருவர் முடிவு கட்டிவிட மாட்டார்களா? என்று பல தயாரிப்பாளர்கள் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்க, அந்த அத்துமீறும் பூனைகளுக்கு பெரிய சைஸ் மணியை கட்டும் முடிவோடு களத்தில் இறங்கியிருக்கிறார் ‘கொம்பன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

அவர் தயாரித்த ‘கொம்பன்’ படத்தை முடக்கிப்போடும் முயற்சியாக, போராட்டம்.. ஆர்ப்பாட்டம் என தொடங்கி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த டாக்டர். கிருஷ்ணசாமி.

‘கொம்பன்’ படம் வெளியானால் தென் தமிழகத்தில் சாதி மோதல் வரும் என்ற இவரது வாதம் நீதிமன்றத்தில் எடுபடவில்லை. திட்டமிட்ட தேதியைவிட ஒரு நாள் முன்னதாகவே ‘கொம்பன்’ படம் திரைக்கு வந்தது.

படம் வெளியான முதல் 5 நாட்களிலேயே 25 கோடிக்கு மேல் வசூலைக்குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் கூடுதலாக 120 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

டாக்டர். கிருஷ்ணசாமி சொன்னதுபோல் தென் தமிழகத்தில் சாதி மோதல் எதுவும் நடக்கவில்லை. மக்கள் ‘தெளிவாகவே’ இருக்கிறார்கள். மாறாக… அவர் குறிப்பிட்ட ஏரியாக்களான மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் எல்லாம் ‘கொம்பன்’ படம் மாபெரும் வெற்றியடைந்திருக்கிறதாம்.

‘கொம்பன்’ வெற்றி தந்த சந்தோஷத்தில் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா திளைத்துக் கொண்டிருந்தாலும், டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்படுத்திய காயமும், மனஉளைச்சலும் அவருக்கு மறக்கவில்லை.

Related Posts
1 of 31

பல கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தை உள்நோக்கம் கொண்ட யார் வேண்டுமானாலும் பிரச்சனை செய்து அந்தப்படத்தை முடக்கிப்போட்டுவிட நினைக்கலாமா? இவர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்பது தெரிந்து, நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. என்றாலும், வழக்கு தொடர்பான செலவுகளை யார் ஏற்பது?

‘கொம்பன்’ படத்தை ஓய்வுபெற்ற நீதிபதிகள் பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ‘கொம்பன்’ படத்தை திரையிட்டுக்காட்ட எற்பாடு செய்தார் தயாரிப்பாளர். இதற்காக கொம்பன் படத்தின் தயாரிப்பாளருக்கு சுமார் 14 லட்சம் செலவாகி உள்ளது.

‘கொம்பன்’ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யாகி விட்ட நிலையில், தயாரிப்பாளர் செலவு செய்த 14 லட்சத்தை யார் திருப்பித் தருவார்கள்?

இதை எல்லாம் கருத்தில் கொண்டே புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறாராம் ஞானவேல்ராஜா. அதுமட்டுமல்ல, தான் செலவு செய்த 14 லட்சத்தை அவரிடமிருந்து வசூலித்துத் தரும்படி மற்றொரு வழக்கையும் தாக்க செய்ய தன் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தும் வருகிறார் ஞானவேல்ராஜா.

இது ஒரு பக்கம் இருக்க, தன் செயலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் திரைப்படங்களை முடக்க நினைப்பவர்களுக்கு ஞானவேல்ராஜாவின் சட்டப்போராட்டம் நிச்சயமாக சரியான சாட்டையடியாக இருக்கும்.