‘ராக்லைன்’ நல்லா கவனிச்சார்..! : ‘லிங்கா’ புகழ் சிங்காரவேலன் சிலிர்ப்பு

Get real time updates directly on you device, subscribe now.

 

rockline

‘லிங்கா’ நஷ்ட விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையை அடுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயலாளர் திரு.டி.சிவா பதவி விலகுவாரா என லிங்கா திரைப்பட வினியோகஸ்தர்களில் ஒருவரான சிங்காரவேலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

”ஜவ்வு போல இழுத்துக் கொண்டே இருந்த இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர்கள் சரத்குமாரும், தாணுவும் தான். கலைக்குடும்பத்தில் கலகம் கூடாது என்று இவர்கள் எண்ணியதன் விளைவுதான் இந்தத் தீர்வு.

10 கோடி ரூபாய் பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி அதை விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களூக்கும் பிரித்து கொடுக்க தாணு பட்ட சிரமங்களை அருகில் இருந்து பார்த்தபோது தான் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவி என்பது மலர்கீரிடம் அல்ல அது ஒரு முள் கிரீடம் என்பதை தெரிந்து கொண்டோம்.

இரண்டு நாட்களாக பலமணி நேரங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நடந்து கொண்ட விதமும், எங்களை உபசரித்த விதமும் கண்களை குளமாக்கிவிட்டன. வில்லுக்கு விஜயன் என்றால் விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ் என்று இலக்கியங்களை திருத்தியாக வேண்டும். அவரைப் போய் கன்னடர் என்று பிரித்து பேசிவிட்டோமே என்று மனம் கூனிக் குறுகிறது.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணமாக எதையாவது செய்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள் எண்று ரஜினிகாந்த் தெரிவித்தவுடன் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷோடு சேர்ந்து தங்கள் பங்களிப்பாக சிறு தொகையையும் கொடுத்து விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டிய வேந்தர் மூவிஸ் நிறுவனம் 10 கோடி ரூபாயில் பங்கு கேட்பது, “பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதையும் புடுங்குச்சாம் அனுமாரு” என்பதை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது.

ஆட்டோவில் வந்திறங்கி இழப்பீடு பெறும் விநியோகஸ்தர்களிடம் ஆடி காரில் வந்து பங்கு கேட்பது தர்மமா என்பதை வேந்தர் மூவிஸ் தெளிவுபடுத்த வேண்டும். விநியோகஸ்தர்களுக்கு தோள் கொடுத்து சுமூகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி பெரிதாக வளரவிட்டு பங்கு கேட்பது நியாயமாக இருக்க முடியாது.

Related Posts
1 of 29

இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் என்ற முறையில் நடுநிலையோடு பேசாமல் வேந்தர் மூவிஸ் நிர்வாகி என்ற முறையில் பேசும் சிவாவின் போக்கு சரியானது அல்ல.

மார்ச் 23 திங்கட்கிழமை அன்று நடைபெற இருக்கின்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சிவா வேந்தர் மூவிஸ் நிர்வாகியாக கலந்து கொண்டால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளராக கலந்து கொண்டால் வேந்தர் மூவிஸ் பற்றி வாய் திறக்க கூடாது என்பதை எச்சரிக்கை கலந்த வேண்டுகோளாக வைக்கிறேன். அதையும் மீறி கலந்து கொண்டால் அதை பேச்சுவார்த்தையில் ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு நாட்களாக நடந்துவரும் பேச்சுவார்த்தையில் தலைவர் தாணுவை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவிட்டு, தொடர்ந்து அவர் பற்றி அவதூறு பரப்புவதை சிவா நிறுத்தி கொள்ள வேண்டும்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ‘அரவான்’ என்ற பெயரில் படத்தை தயாரித்து அதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களூக்கும் கொடுக்க வேண்டிய இழப்பு தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கும் சிவா நீதி, நியாயம் பற்றி பேசுவதை சகித்துக் கொள்ள இயலவில்லை.

‘அரவான்’ படத்தில் இழப்பை சந்தித்த பின்பு சொத்துக்களை வாங்கி குவிக்கும் சிவாவுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்ட வேண்டும்.

மார்ச் 23 திங்கட்கிழமை அன்று திரையரங்க உரிமையாளர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜாம்பவான்களான அருள்பதி, திருப்பூர் சுப்ரமணி ஆகியோரோடு முன்னணி விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வதால் அன்றைய தினமே பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை தெரிகிறது.

முதல்கட்டமாக வைப்புத் தொகை திருப்பித் தரப்படும் என்று தெரிகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு எங்களால் இயன்ற நிவாரணத்தை எதிர்காலத்தில் வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை வைக்க கடமைப்பட்டுள்ளேன். எல்லா விநியோகஸ்தர்களுக்கும் தொடர்ச்சியாக படங்களை வெளியிட இருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

தோல்வியால் விரக்தியில் இருந்த எங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி சிறு தொகையையும் வியாபார முதலீடாக கொடுத்த ராக்லைன் வெங்கடேஷுக்கும், விநியோகஸ்தர்களே சினிமா வியாபாரத்தின் முதுகெலும்பு என்பதை எடுத்துரைத்து எங்களுக்கு இழப்பீடு கிடைக்க செய்த கலைப்புலி தாணுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.