வெள்ள நிவாரண நிதி : 10 லட்சம் கொடுத்தார் ரஜினிகாந்த்

ஆந்திராவில் வெள்ளம் வந்தபோது அம்மாநில அரசுக்கு கேட்காலமேயே வெள்ள நிவாரண நிதியை வாரிக் கொடுத்த கோலிவுட் ஹீரோக்கள் தமிழகத்தில் வெள்ளம் வடியும் வரை அமைதி காத்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் முன்னணி ஹீரோக்கள் எல்லோரையும் மீம்கள் உருவாக்கி கலாய்த்ததோடு, கடும் கண்டனங்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.
இதற்கிடையே தமிழக அரசிடம் தி.மு.க உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் வெள்ள நிவாரண நிதி கொடுக்க ஆரம்பிக்கவும், நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிவாரண நிதி திரட்டும் வேலை ஆரம்பமானது.

இந்த நிதி திரட்டலில் இதுவரை நடிகர் சங்கம் சார்பில் சூர்யா, கார்த்தி – ரூ.25 லட்சம், விஷால் – ரூ.10 லட்சம், தனுஷ் – ரூ.5 லட்சம், சிவகார்த்திகேயன் – ரூ. 5 லட்சம், சிபிராஜ் – ரூ.2.25 லட்சம், விக்ரம் பிரபு – ரூ.5 லட்சம் ஆகியோர்களிடம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்கர் சார்பில் நிவாரண நிதியை எப்போது கொடுப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதில் முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் தன் சார்பில் ரூ.10 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக நடிகர் சங்கத்தில் கொடுத்திருக்கிறார்.
ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட ரூ.10 லட்சத்துக்கான காசோலை ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் தரப்பட்டிருக்கிறது.