வெள்ள நிவாரண நிதி! : திரையுலகிலிருந்து நீளும் முதல் உதவிக்கரம்
கடந்த ஒருவார காலமாக தமிழகத்தில் பெய்த கனமழையில் மொத்த மாநிலமும் ஸ்தம்பித்து விட்டது.
என்னை வெல்ல எந்தக் கொம்பாதிக் கொம்பனாலும் முடியாது என்பதை நின்று நிதானித்து நிரூபித்த இயற்கை மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது வழக்கம் போல கடலூர் மாவட்டம் தான்.
அதை விட பெரிய அதிர்ச்சியாக எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தலைநகரம் சென்னை தண்ணீரில் தத்தளித்தது.
எதிர்க்கட்சியான தி.மு.க கூட வெள்ளத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்து, பின்னர் அவர்களே களத்தில் இறங்கி மக்களுக்கு உதவத் தயாரானார்கள். இதர அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என எல்லா மட்டத்திலும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்க அரசோ 500 கோடி ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக அறிவித்தது.
தி.மு.க தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு 1 கோடி ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசிடம் சேர்ப்பிக்கப்படும் என்று அறிவித்ததோடு வசதி படைத்தவர்களிடமும் அரசு நிதி கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அவரின் அந்தக் கோரிக்கை ஆளும் அரசுக்கு கேட்டதோ இல்லையோ? மலேசியாவில் இருக்கும் ரஜினியின் காதுகளை எட்டி விட்டது.
மொத்த திரையுலகமும் வெள்ளம் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.
ஆந்திராவில் வெள்ளம் வந்த போது வரிந்து கட்டிக்கொண்டு நிதி கொடுத்த திரையுலகினர் தண்ணீரில் தத்தளிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை வேடிக்கைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறது மொத்த தமிழ்நாடும்!
இதோ அவர்கள் எதிர்பார்த்தபடியே திரையுலகிலிருந்து முதல் ஆளாக நீண்டிருக்கிறது ரஜினியின் உதவிக்கரம்.
இதுகுறித்து நேற்று திடீரென்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவியது.
அதில் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் குறித்தும் மலேசியாவில் கபாலி படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த்துக்கு தகவல் தரப்பட்டிருக்கிறது.
அதைக்கேட்டு மிகவும் வருத்தப்பட்ட ரஜினிகாந்த் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை விரைவில் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் அவர் தரப்பில் இருந்து வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த செய்தி சொல்லுகிறது.
இனி இந்த உதவும் கரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கட்டும்!