பர்ஸ்ட் லுக் போஸ்டரே ஹாலிவுட் காப்பி! : வாங்கி கட்டிக் கொண்ட வேலைக்காரன் டைரக்டர்
‘ஜெயம்’ படத்திலிருந்து இயக்கிய படங்கள் எல்லாமே தெலுங்கு ரீமேக் ஆனதால் ”ரீமேக் ராஜா” என்ற பட்டப்பெயரோடு படங்களை இயக்கி வந்தார் டைரக்டர் எம்.ராஜா.
பிறகு சொந்தமாக கதையை யோசித்து மீண்டும் தம்பி ஜெயம் ரவியுடன் தமிழில் ”தனி ஒருவன்” என்கிற நேரடி மெகா ஹிட் படத்தை கொடுத்தார்.
அந்தப் படத்துக்குப் பிறகு ”ரீமேக் ராஜா” என்கிற அவப்பெயரும் காணாமல் போனது. எம்.ராஜா என்கிற பெயரை மோகன் ராஜா என்றும் மாற்றிக் கொண்டார்.
தனி ஒருவனின் அசூரத்தனமான வெற்றியைப் பார்த்து தான் மோகன் ராஜாவை அழைத்து ”வேலைக்காரன்” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் சிவகார்த்திகேயன்.
24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக நேற்று ”வேலைக்காரன்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
போஸ்டரில் ஒரு கையில் ஹேண்ட்பேக்கும், இன்னொரு கையில் அருவாவுடனும் காட்யளித்தார் சிவகார்த்திகேயன். இதை வைத்தே படத்தில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன், ரெளடி என இரண்டு விதமான கெட்டப்புகளில் வருவார் என்று ரசிகர்கள் உறுதி செய்தனர். அந்தக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹாலிவுட் படத்தின் போஸ்டரிலிருந்து முழுமையாக காப்பியடித்து டிசைன் செய்யப்பட்டிருக்கிறது என்கிற உண்மையும் அம்பலத்துக்கு வந்தது.
ஃபாலிங் டவுன் என்ற பெயரிடப்பட்ட இப்படம் கடந்த 1993ஆம் ஆண்டில் ரிலீசான ஹாலிவுட் படம். Michael Douglas, Robert Duvall, Barbara Hershey உள்ளிட்டோர் நடித்த இப்டத்தை Joel Schumacher இயக்கியிருந்தார். அப்படத்தின் போஸ்டரில் அவர் ஒரு கையில் சூட்கேசும் மறுகையில் துப்பாக்கியும் வைத்திருக்கிறார் ஹீரோ. அதேபோலத்தான் வேலைக்காரன் போஸ்டரில் துப்பாக்கிக்குப் பதிலாக அருவாளை கொடுத்து விட்டார் டைரக்டர் மோகன் ராஜா.
தமிழ்சினிமாவில் ஹாலிவுட் படங்களைப் பார்த்து அப்படியே காப்பியடிப்பதும், கதையைத் தழுவி படமெடுப்பதும் வழக்கமான ஒன்று தான்.
அதைக்கூட சரி, கதைப்பஞ்சம் அதனால் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் மன்னித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு படத்தின் போஸ்டரைக் கூட சுயமாக சிந்தித்து வடிவமைக்க முடியாதா? என்பது தான் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்த காப்பி சமாச்சாரம் வெளியானதும் தொடர்ந்து சில நாட்கள் ட்ரெண்ட்டிங்கில் வைத்து வேலைக்காரன் பர்ஸ்ட் லுக்கை கொண்டாட நினைத்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம அப்செட்.
அதோடு மோகன் ராஜாவை கடுமையாக திட்டிய ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் மட்டும் தான் காப்பியா? இல்ல மொத்தப்படமுமே காப்பி தானா? என்கிற டவுட்டையும் அவரிடம் எழுப்பியிருக்கிறார்கள்.
இதற்கு மோகன் ராஜா தான் பதில் சொல்ல வேண்டும்.