எம்.எஸ்.வி போல இசை மகானை நான் பார்த்ததே இல்லை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்

Get real time updates directly on you device, subscribe now.

ilayaraja1

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி’ என்கிற பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது : “எம்.எஸ்.வி. பெரிய இசை மேதை, பெரிய இசை மகான். இவர் இசை ஞானி என்றால் அவர் இசை சாமி. அதாவது இசைக் கடவுள். அந்தக் கடவுள்பற்றி இப்படிப்பட்ட ஞானிகளுக்குத்தான் தெரியும் அதுதான் அவரைப்பற்றி இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

திறமை என்பது எல்லாருக்கும் இருப்பதில்லை அது அப்பா, அம்மா, கொடுத்து வருவதல்ல. கடவுள் கொடுத்து வருவது. திறமை என்பது கடவுள் கொடுத்து வரவேண்டும். சரஸ்வதி கடாட்சம் இருப்பவர்களுக்கே அது கிடைக்கும். எம்.எஸ்.வி அப்படிப்பட்ட இசைத்திறமை பெற்ற மேதை. அந்தத் திறமையால் பணம் வரும், பெயர் வரும், புகழ் வரும் .

ஆனால் இவை எல்லாம் வந்து விட்டால் தலை, கால் நிற்காது. தலைக்கனம் வந்துவிடும். ஆனால் இவர் கடுகளவு கூட தலைக்கனம் இல்லாமல் இருந்தார்.” என்றார்.

Related Posts
1 of 76

”சினிமா உலகம் பெரியது. பலரும் வந்தால் நிகழ்ச்சியின் போக்கும் சூழலும் மாறிவிடும் என்று தான் நான் யாரையும் அழைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பலரும் வராத போது உங்களுக்கு மட்டும் இங்கே வரத் தோன்றியது எப்படி? ”என்று ரஜினியிடம் இளையராஜா கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரஜினி ”எம்.எஸ்.வி அவர்கள் பெரியமேதை. அவர்1960,70 களிலேயே புகழ்பெற்று விளங்கினார். அப்போது எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பெரிய நடிகர்களையும் ஸ்ரீதர், பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்களையும், டி.எம்.எஸ்., பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற இசைக்கலைஞர்களையும் உயர்த்தி உச்சத்தில் கொண்டு சென்றவர் அவர். அவரால் மேலே உயர்ந்து புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்

அவர் ராமாயணத்தில் ராமனுக்கு அனுமன் உதவியதைப் போல பலருக்கும் உதவியிருக்கிறார். அனுமனைப்போல பெரிய உதவிகள் செய்தார். ஆனால் அணிலைப் போல எளிமையாக வாழ்ந்தவர். அவரைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடி நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நானும் ஆசீர்வாதம் பெற்றதைப் போல நினைக்கிறேன்

நீங்கள் இசைஞானி, எப்போதும் தன் மனதில் பட்டதை சொல்பவர். யார் பற்றியும் கவலைப்படாமல் பேசுபவர். உள்ளத்தின் உணர்வுகளை ஒளிக்காமல் வெளிப்படுத்துபவர். உங்களை எம்.எஸ்.வி எப்படி பாதித்தார் என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்தேன். என்னுள்ளில் எம்.எஸ்.வி. என்று நீங்கள் என்ன கூற நினைக்கிறீர்கள்? உங்களை அவர் எப்படிப் பாதித்தார் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று அறிய எனக்கு ஆவலாக இருந்தது, அதனால் வந்தேன். அவரைப் போல இசை மகான் இதுவரை திரையுலகில் நான் பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதும் இல்லை.” இவ்வாறு ரஜினி பேசினார்.