நவீன இசை ரொம்பக் கேவலமா போய்க்கிட்டுருக்கு… : இளையராஜா வருத்தம்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதன் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் விதமாக இசைஞானி இளையராஜா ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி. ‘ என்கிற பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சியை நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்தினார்.
இசைநிகழ்ச்சி தொடங்கியதும் இளையராஜா முதலில் எம்.எஸ்.வி பற்றி சற்று ஆதங்கத்துடன்தான் ஆரம்பித்தார்.
“எம்.எஸ்.வி அண்ணா உலகமகா இசையமைப்பாளர் தான் ,உலகப்புகழ் பெற்ற எந்த இசையமைப்பாளருக்கும் அவர் குறைந்தவரல்ல. தமிழ்நாட்டிலே பிறந்ததால் எம்.எஸ்.வி அண்ணா உலக மகா மேதையில் சேரமாட்டாரா? பாரதி சொன்ன மாதிரி நெருப்பில் சிறியது என்ன பெரியது என்ன? தழலில் சிறிது என்ன பெரிது என்ன? தமிழ்நாட்டு நெருப்பு உலகை எரிக்காதா? அக்கினிக் குஞ்சு அளவில் சிறிதானாலும் எரிக்கும்.
அவர் என் இளமைப் பருவத்தை ஆட்கொண்டதை என்னுள் புகுந்து நிறைந்து என்னைப் பாதித்ததையே இங்கே. பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.” என்றவர் தன் நினைவலைகளில் அரங்கத்தை மூழ்கவிட்டார்.
“எம்.எஸ்.வி அவர்கள், இசையமைப்பாளர் சிஆர் சுப்பராமனின் சீடர்..எம்.எஸ்.வி,தன் குருவை உயிரைப் போல் மதித்தவர் . ‘தேவதாஸ்’ படத்திற்கு இசையமைத்த போது சுப்பராமன் மறைந்து விட்டார். இரண்டு பாடல்கள் முடியவில்லை. எம்.எஸ்.வி தான் பாடல்கள் இசையமைத்து பின்னணி இசையமைத்தும் முடித்துக் கொடுத்தார் சுப்பராமனை எனக்கும் தெரியும் அது ஒரு பாரம்பரியம் போல எனக்குள்ளும் அவர் இசை இருக்கிறது.
எனக்கு இசை கற்றுக் கொடுத்த மாஸ்டர் தன்ராஜ் சினிமா இசையமைப்பாளர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்வார். சினிமா இசையமைப்பாளர்களுக்கு இசைபற்றிய நணுக்கங்கள், தொழில்நுட்பங்கள் தெரியாது என்பார். நானும் அப்படிப்பட்ட கருத்தையே கொண்டிருந்தேன் எம்.எஸ்.வியை சந்திக்கும் வரை. அவர் இசையமைத்த வேகம்,அவரது ஞானம் ,துல்லியம் இவற்றை நேரில் பார்த்தபின் என் அபிப்ராயம் எல்லாம் உடைந்து நொறுங்கியது.
ஒரு முறை ‘சண்டிராணி’ படப் பாடலை யாரோ இசையமைத்ததாக நினைத்து அவரிடம் பேசினேன் அவர் அது தான்தான் என்றதும் எனக்கு அதிர்ச்சி. ஏன் நம்பமாட்டாயா என்றார். அன்று அவர்மீது ஏற்பட்ட பிரமிப்பு பிறகு கடைசி வரை குறையவே இல்லை.
அவரது பாடல்களில் எல்லாமும் இருக்கும். ஒரு பாடலில் ‘மறைந்தது சிலகாலம், தெளிவும் அறியாது ,முடிவும் புரியாது மயங்குது எதிர்காலம் ‘என்று கவலைப்பட வைத்தார் அடுத்த பாடலில் ‘மயக்கமா கலக்கமா’ என நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்தார்.
அவரது ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடலைக் கீர்த்தனைக்கு ஒப்பானது என்றார் பால முரளி கிருஷ்ணா.
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ என்ன ஓர் அற்புதமான பாடல் அப்படி எல்லாம் இன்று போடமுடியுமா? இப்போது போட்டால் எழுந்து போய் விடுவார்கள். சூப்பர் ஸ்டார் நடித்தாலும் இப்போது எழுந்து போய் விடுவார்கள். ஏனென்றால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வேறாக இருக்கிறது,. ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டு போல இப்போது இல்லை என்பது திட்டவட்ட முடிவு இனியும் இருக்கப் போவதில்லை .இப்போதெல்லாம் சிப்ஸ், பாப்கார்ன்கள் வந்துவிட்டன.
இப்போதுள்ளவர்களுக்குச் சொல்கிறேன். இன்று இசை கேவலமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
கையில் சாம்பிள் வைத்துக் கொண்டு இசையமைத்து வருகிறார்கள். சாம்பிளை எல்லாம் தூக்கி போடுங்கள் கையிலுள்ள கம்யூட்டரை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டரைப் பயன்படுத்தாதீர்கள். மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டர் சிப்பை விட்டுவிட்டு மூளையிலுள்ள சிப்பை பயன்படுத்துங்கள்.
எம்.எஸ்.வி அண்ணாவை விட்டுவிட்டு எனக்கு ஸ்ரீதர் பட வாய்ப்பு வந்த போது நான் அதை மறுத்தேன். பாரதிராஜா கூட பெரிய வாய்ப்பு ஏன் மறுக்கிறாய் என்றார். 58 படங்கள் இசையமைத்த எம்.எஸ்.வி அண்ணாவையே அவர் தூக்கிப் போட்டு விட்டார் என்று நான் என்று மறுத்தேன். அப்படிப்பட்ட எம்.எஸ்.வி. என்னைப் பாதித்த உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன். அந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடாது. என்றுதான் நான் யாரையும் கூப்பிடவில்லை. அவருக்கு மறைவு என்பதே இல்லை அவர் என்றும் நம்முடன் இருப்பார். இன்றும் எம்.எஸ்.வி அண்ணா நம்முடன் இருக்கிறார்.” என்றார் இசைஞானி இளையராஜா.