”ஆர்யா, சிம்புவை வைத்து படம் இயக்குவேன்” – சந்தானத்தின் புது அவதாரம்!

Get real time updates directly on you device, subscribe now.

காமெடியனாக வருஷத்துக்கு ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் தலைகாட்டிய சந்தானத்துக்கு, ஹீரோவான பிறகு ஒரு படம் ரிலீசாவதே பெரும் போராட்டமாகி விட்டது.

ஏற்கனவே அவர் நடிப்பில் தயாரான ‘சர்வர் சுந்தரம்’ உட்பட மூன்று படங்கள் தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒன்று கூட இன்னும் ரிலீசாகவில்லை. இதற்கிடையே தனது சொந்தத் தயாரிப்பான ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை இந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்கிறார்.

அதையொட்டி நம்மை சந்தித்துப் பேசினார்… பழைய தோற்றம் இல்லாமல் ஆள் பார்ப்பதற்கு மெலிந்து போய் புதிய தோற்றத்தில் வந்திருந்தார்.

”படம் தயாரிப்பது தான் ரொம்ப கஷ்டம், என்ன பார்த்தீங்கள்ல படம் தயாரிக்கப் போனதால மெலிஞ்சு போயிட்டேன்..” என்று சிரித்துக் கொண்டே தனது புதிய தோற்றத்துக்கு விளக்கம் கொடுத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம். அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

Related Posts
1 of 19

‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம். ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை தேர்ந்தெடுத்தோம்.

‘மொட்டை’ ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார். அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார்.

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம். நான் படம் தயாரிக்கும் போது அந்தக் கஷ்டங்களை தெரிந்து கொண்டேன். என்னைப் பார்த்தீங்கள்ல படம் தயாரிக்கப் போய் மெலிஞ்சு போயிட்டேன். பலபேர் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் என்னிடம் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.

நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

என்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு அவர்களுக்கு நன்றி. என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர் தான் எழுதியிருக்கிறார். எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி” என்றார் சந்தானம்.