ட்விட்டரில் இருந்து சிம்பு விலகல் : என்ன காரணம்?
‘வாலு’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து எஸ் டி ஆர் இடை விடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் முதன்மையானவர் சிம்பு. இன்று அவர், தான் இனிமேல் ட்விட்டரில் தொடர போவதில்லை என அறிவித்துள்ளார்.
‘இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்து வந்ததற்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர், எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வாகிக்கப்படும். தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிவேன். ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான்.
அவர்களுடனான என்னுடைய தொடர்பு வெற்றி படம் மட்டும் தான், தவிர இதை போன்ற சமூக வலைதளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன்.
என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை’ என்றார் சிம்பு.
நயன்தாரா, ஹன்ஷிகா என தொடர்ந்து இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த சிம்பு சமீபகாலமாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். மேலும் வாலு ரிலீஸ் பிரச்சனையின் போது விஜய் தவிர யாருமே சிம்புவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வரவில்லை.
இப்படி தொடர்ந்து அவருக்கு வந்த சங்கடங்களால் பாடம் கற்றுக்கொண்டவர் இனி நடிப்பில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த இருக்கிறார். அதன் ஆரம்பம் தான் இந்த ட்விட்டரில் இருந்து வெளியேற்றம் அறிவிப்பு என்கிறது சிம்புவின் நெருங்கிய வட்டாரம்.
எல்லாத்துக்கும் ஒரு அனுபவம் தேவைப்படுது…!