வீட்ல விசேஷம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஆர்.ஜே பாலாஜியிடம் இருந்து அடுத்து ஒரு ஹிட் பார்சல்!
இந்தியில் ஆல்ரெடி ஹிட்டடித்த பதாய் ஹோ படத்தை அப்படியே தமிழாக்கித் தந்துள்ளார்கள் இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி, மற்றும் சரவணன். ஒரு ரிமேக் படத்தை அப்படியே விஷுவல் காபிபேஸ்ட் செய்யாமல் நம் நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு டிங்கரிங் செய்தால் தான் அது வொர்க்கவுட் ஆகும். அதை நன்றாக வொர்க்கவுட் செய்துள்ளது வீட்ல விசேஷம் டீம்.

வயதான காலத்தில் அப்பாவின் ரொமான்ஸ் அதிகமாகி அம்மா கர்ப்பமானால் கல்யாணக் கனவில் இருக்கும் மகனின் மனநிலை எப்படி இருக்கும்? நம் சமூகம் அதை எப்படிப் பார்க்கும் என்பதைப் பேசியிருக்கிறது வீட்ல விசேஷம் படம்..முக்கியமாக இன்னொரு விசயத்தையும் பேசியிருக்கிறது. அது பேரன்பு

மிகச்சுமாராக நடித்தாலே போதும் என்கிற லெவல் கதை என்பதால் இந்தப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி பக்காவாக செட்டாகியிருக்கிறார். அபர்ணா பாலமுரளியும் அப்படியே. இவர்களை எல்லாம் சிங்கிள் ஷாட்டில் அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் நடிகை ஊர்வசி..எத்தனை மாடுலேசன்கள் எப்படியான உடல்மொழி. அடடா! சத்யராஜை இப்படியொரு அம்மாஞ்சி & அடப்பாவி கலந்த தோற்றத்தில் பார்த்து எவ்வளவு காலமாயிற்று. சிறப்பாக நடித்துள்ளார். ஒரு சீனில் ஒரு பாட்டி படா ஜோராக நடித்து அப்ளாஸ் வாங்குகிறது

இந்தப்படத்திற்கு எந்தமாதிரியான பாடல்கள் தேவை, எப்படியான பின்னணி இசை தேவை என்பதை அறிந்து உழைத்திருக்கிறார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவும் கதைக்குத் தேவையானதை தந்துள்ளது

பல காட்சிகளை வசனத்தை வைத்தே ஓட்டியிருப்பது சின்ன உறுத்தல். ஒருசில இடங்களில் சீரியல் நெடி அடிப்பதும் உண்மை. ஆனால் படம் முடியும் போது நமக்குள் அப்படியொரு எனர்ஜியை பாய்ச்சுவதால் நிச்சயமாக வீட்ல விசேஷத்தை வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்துச் சென்று காணலாம்

3.5/5