அஜித் – விஜய் ரசிகர்களை சிந்திக்க வைத்த வெங்கட்பிரபு!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரிலீசான ‘மாசு’ படம் நல்ல வசூலோடு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பல காட்சிகள் குழந்தைகள் ரசிக்கும்படி இருப்பதால் பெண்கள், குழந்தைகள் மத்தியில் அப்படத்துக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
அப்படிப்பட்ட இப்படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு அஜித், விஜய் படங்களின் பின்னணி இசை மற்றும் கேரக்டர்களின் பெயர்களை சில காட்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தில் ’நான் கடவுள்’ ராஜேந்திரன் , பிரேம்ஜி உள்ளிட்டோருக்கு அஜித்தின் படங்களில் வரும் கேரக்டர் பெயர்களும், பின்னணி இசைகளும், சூர்யாவிற்கு விஜய் படங்களின் பின்னணி இசை மற்றும் கேரக்டர் பெயர்கள் பயன்படுத்தியிருந்தார்.
இது தற்போது சமூகவலைத்தளங்களில் பெரிய பிரச்சனையாக வெடித்து போய்க்கொண்டிருக்கிறது.
”அதெப்படி காமெடியன்களுக்கு எங்கள் ‘தல’ படங்களின் கேரக்டர்கள் பெயரையும் பின்னணி இசையையும் பயன்படுத்தலாம்?” என்று அஜித் ரசிகர்கள் கொந்தளிக்க, பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கலாய்க்க மோதல் முற்றாமல் போய்க்கொண்டிருக்கிறது.
அதோடு விட்டார்களா? இயக்குனர் வெங்கட்பிரபுவையும் அஜித், விஜய் ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள். அதுவரை பொறுமையாக இருந்த வெங்கட்பிரபு அஜித் – விஜய் ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
”தயவு செஞ்சு இந்த வெறுப்பை நிப்பாட்டுங்க. எப்படியானாலும் நாங்க ( அஜித், விஜய், சூர்யா ) எல்லோரும் ஒரே ஃபேமிலி தான். அதனால் தயவு செஞ்சு படத்தை பார்க்கிற ரசிகர்கள் வெறுப்பை கை விட்டுட்டு படத்தை ரசிங்க…” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
பல மேடைகளில் அஜித்தும், விஜய்யும் ஒன்றாகத் தோன்றி தங்களது நட்பை ரசிகர்களுக்கு காட்டிக்கொண்டாலும் அவர்களது ரசிகர்கள் அவ்வப்போது சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொள்வது வழக்கமாகி விட்டது.
அப்படிப்பட்டவர்களுக்கு வெங்கட்பிரபுவின் இந்த அட்வைஸ் நிச்சயமாக சிந்திக்க வைத்திருக்கும்.!