பொங்கலுக்கு விஜய் வர்றார் : அஜித் வர்றாரா?
இப்படி ஒரு கேள்வியோடு அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் 2017 பொங்கலுக்கு விஜய்யின் 60 வது படம் ரிலீசாவது உறுதியாகி விட்டது.
தெறி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கப்போகும் படம் அவருக்கு 60வது படம். இதனால் அந்தப்படத்தை பெரிய அளவில் வரவேற்று கொண்டாடித் தீர்க்க முடிவு செய்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
ஏற்கனவே ‘தெறி’ டீஸர் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் அந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் தெறி படப்பிடிப்பை முடித்த கையோடு ஓய்வெடுத்து வரும் விஜய் தனது 60-வது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் பரதனுக்கு கொடுத்து விட்டார்.
பரதனும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார், இதில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.
இப்படி பட வேலைகள் பரபரவென்று ஆரம்பித்து படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று தொழில்நுட்ப வேலைகளும் சேர்த்து இந்த ஆண்டு இறுதியில் முடிகிறது.
அதன் பிறகு அடுத்த ஆண்டு 2017 பொங்கலுக்கு இந்தப்படம் ரிலீசாகும் என்று விஜய் 60 படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ தினங்களில் விஜய் – அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. அதேபோல வருகிற பொங்கலுக்கும் விஜய் – அஜித் படங்கள் மோதுமா என்று இரண்டு பேரின் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் விஜய் அதை உறுதி செய்து விட்டார்.
அஜித் தரப்பில் தான் எந்த உறுதியான தகவலும் இல்லை. அவரும் கன்பார்ம் செய்து விட்டால் இரண்டு பேரின் ரசிகர்களும் ட்விட்டரில் கதகளி ஆடுவது நிச்சயம்.