அதென்ன விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி? – கொந்தளித்த திரையுலகம்
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எந்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்தக் கூடாது என்று முடிவு செய்தால் அது எல்லோருக்கும் பொருந்தும் தானே? அப்படியிருக்கும் போது விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கலாம்? என்று கொந்தளித்திருக்கிறது தமிழ்த்திரையுலகம்.
டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு எதிராக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1-ஆம் தேதி முதல் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம் மூன்றாவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் இது போன்ற வேலை நிறுத்தம் நடைபெறும் போது கூட்டத்தில் யாராவது இரண்டு பேர் புகுந்து கல்லெறிந்து கலைப்பது போல போராட்டத்தை நசுக்கும் வேலைகளில் கச்சிதமாக ஈடுபடுவார்கள்.
இந்த முறை தயாரிப்பாளர் சங்கம் முன்னெத்த இந்தப் போராட்டம் நியாயங்கள் கொண்டதாக இருந்ததால் ஒட்டுமொத்த திரையுலக்ள அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தது. இதனால் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் தியேட்டர் அதிபர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதற்கிடையே போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 16ம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
ஆனால் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதுப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சில பேர் கொந்தளித்து விட்டார்கள். அதெப்படி விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கலாம். இதுதான் போராட்டத்தின் நியாயமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அவர்களின் சந்தேகத்துக்கு பதிலடியாக யாருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை அளிக்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பதாவது “போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களும் பொருளாதார ரீதியான இழப்பை சந்திக்கக் கூடாது என்று ஆய்வு செய்து தான் நான்கைந்து திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு இரண்டு, மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சில தயாரிப்பாளர்கள் இன்னும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பை நடத்தினால் போதும் எங்கள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றார்கள். ஒரு தயாரிப்பாளர் டெல்லி ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்காக 18 லட்சம் ரூபாயை முன்பணமாக கட்டியிருக்கிறேன். அது வேஸ்ட் ஆகிவிடக்கூடாது அதனால் ஒரே ஒருநாள் மட்டும் அனுமதி தரும்படி கேட்டார் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படித்தான் விஜய் படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திலிருந்து மாஸ்டர்கள் சென்னை வந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் திருப்பி அனுப்பினால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றார்கள். அதற்காகவே விஜய் படத்துக்கும் ஒருசில நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. மற்றபடி யாருக்கும் தயாரிப்பாளர் சங்கம் தனிப்பட்ட முறையில் சலுகை காட்டவில்லை.
திட்டமிட்டபடி எந்தவித இடையூறும் இல்லாமல் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.வருகிற 23ம் தேதியிலிருந்து வெளியூர் ஷுட்டிங், வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.