விஜய் டிவிக்கு வாய்த்த ‘டிடி’ மிகவும் திறமைசாலி, என்ன வாய்தான் ரொம்ப நீளம்..!!!!
தமிழ்த் தொலைக்காட்சிகளில் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் தனித்தன்மைக்காகவே இன்றைக்கும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது விஜய் டிவி.
நீயா நானா, ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என பல ரியாலிட்டி ஷோக்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த டிவி இப்போது நேரடி நிகழ்ச்சிகளை நடத்துவதில் தொடர்ந்து சொதப்பி அதே தனது உயிருக்கு உயிரான ரசிகர்களிடையே பெரும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது.
நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து தருகிறேன் என்ற பெயரில் பிரபலமான தொகுப்பாளர்களின் ஓவர்….. பேச்சு தான் அதற்கு முக்கிய காரணம்.
ஏற்கனவே சென்ற ஆண்டு நடைபெற்ற விஜய் டிவி விருது விழாவில் தொன தொனவென்று பேசியே நிகழ்ச்சியை சொதப்பி வைத்த தொகுப்பாளர் ‘டிடி’என்கிற திவ்யதர்ஷினி அதே போல சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ‘இளையராஜா 1000’ என்ற விழாவிலும் ஓவராகப் பேசி விழாவை சொதப்பி எடுத்து ரசிகர்களிடையே கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறார்.
1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஒரு தனியார் நிறுவனம், விஜய் டிவியுடன் இணைந்து நடத்த திட்டமிட்டது. நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் தொடர்ந்து புரமோஷன்கள் வந்து கொண்டிருந்தன. காதுக்கு இனிமையான, மனசை லேசாக்கும் இசைஞானியின் பாடல்கள் இதில் பாடப்படும் என்பதால் 500 தொடங்கி 25,000 விலை வரையிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டது.
இளையராஜாவின் வெறித்தனமான ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலோடு டிக்கெட்டுகளை விலைக்கு வாங்க நிகழ்ச்சிக்கு போனால் அங்கே இளையராஜா பாடல்களை கேட்பதை விட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பார்த்திபன் மற்றும் டிடியின் வாய்ச்சவலால்களைத் தான் கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு சவுண்ட் சிஸ்டமும் மக்கர் செய்ய ரசிகர்கள் கோபத்தில் கத்த, அதையும் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் மேற்படி இரு தொகுப்பாளர்களும்!
பானுப்ரியா, மீனா, கௌதமி குஷ்பு, பி.வாசு, , பாலா, கே. பாக்யராஜ், மிஷ்கின் என விழாவுக்கு வந்திருந்தவர்களை கூட இசைஞானியின் பாடல்களை ரசிக்க விடாமல் அவரைப் பற்றிச் சொல்லுங்கள் என்று ரசிகர்களுக்கு புதிய தகவல்களை தருவதைப் போல அவன் தெரிந்து வைத்திருக்கும் அருதப்பழசான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு இசை விழா பேச்சு மேடையாக மாறியிருந்ததை கவனித்த கமல்ஹாசன் ”இது பேச வேண்டிய மேடையல்ல… பாட வேண்டிய மேடை” என்று ஜாடைமாடையாக சொல்லிப் பார்த்தார். அப்படியிருந்தும் டிடியும், பார்த்திபனும் பேச்சைக் குறைப்பதாக இல்லை.
சரி போனால் போகுது, இளையராஜா ஒரு பாடலாவது பாடுவார், மெய் மறந்து ரசித்து விட்டுப் போகலாம் என்று வந்திருந்த ரசிகர்களுக்கு பேரிடியாக இறங்கியது லேட்டாக வந்த அந்தச் செய்தி.
ஆமாம், விழாவில் இளையராஜா பாடப்போவதில்லை. அவரும் ஒரு பார்வையாளராகத்தான் வந்திருக்கிறார் என்கிற செய்தி நிகழ்ச்சி முடியவும் தான் எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
இப்படி ஒரு இசைமேதைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி பான்சர்களின் பண வெறியாலும், பார்த்திபன், டிடியின் பேச்சு வெறியாலும் இசைஞானி ரசிகர்களின் சாபத்தை ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டு போயிருக்கிறது விஜய் டிவி.
மேற்படி சொதப்பல்கள் எல்லாவற்றையும் பக்காவாக எடிட் செய்து சிறப்பாக நடந்தது போன்ற ஒரு தோற்றத்தை வரும் நாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் காட்டிக்கொள்ளும். எப்படி கத்தறி போட்டாலும் எல்லா காட்சியிலும் ‘டிடி’யின் பேச்சு வெறியை கத்தறி போட்டு குறைப்பது என்பது முடியாத காரியம்.
மொத்தத்தில் விஜய்டிவிக்கு வாய்த்த ‘டிடி’ மிகவும் மிக திறமைசாலி, என்ன வாய் தான் ரொம்ப நீளம்…!