மருந்து வாங்கப் போறீங்களா? : உஷாரய்யா உஷாரு…

Get real time updates directly on you device, subscribe now.

owdatham

வாயில் நுழையாத பெயர்களைக் கொண்ட நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கூட நம்பி விடலாம்.

ஆனால் ஆண்டுக்கு ஆண்டு நோயாளிகள் பெருகக் காரணமான சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்த இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படவில்லை என்று மருத்துவ உலகம் சொன்னால் அதை உங்களால் நம்ப முடிகிறதா?… அப்படியானால் அதன் பின்னணியில் மருந்து கம்பெனிகளின் பணம் பண்ணும் பேராசை இருக்கிறது என்று தானே அர்த்தம்?

புற்று நோயைக் கூட குணப்படுத்த மருந்துகள் வந்து விட்ட இந்த விஞ்ஞான யுகத்தில், சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்தக் கூடிய மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் தங்களை முழுமையாக நம்பியிருக்கும் மனித குலத்துக்கு ஆளும் அரசுகள் செய்கிற பச்சைத் துரோகம்.

ஒருவேளை கண்டுபிடித்தால் அதை வைத்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் மருந்து நிறுவனங்களின் வியாபாரம் என்னாவது? அதற்கு இடம் கொடுக்கிற அரசியல்வாதிகளின் கமிஷன் என்னாவது? இப்படி சர்க்கரை நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருந்து கம்பெனிகளின் அதிர்ச்சிகரமான பக்கங்களை அப்படியே படம் பிடித்து காட்டப்போகும் படம் தான் ‘ஔடதம்’! (ஒளதடம் என்றால் மருந்து என்று பொருள்.)

Related Posts
1 of 11

ஒரு மருந்தை நாம் மருந்துக் கடையில் வாங்குகிற போது அதில் என்னென்ன மூலப்பொருட்களை சேர்த்திருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக படித்துப் பார்க்க வேண்டும். அதற்கு மாற்றாக வேறு நிறுவனங்களின் மருந்து ஏதாவது இருக்கிறதா? காலாவதியாகும் தேதி என்ன? அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனம் நம்பிக்கையான நிறுவனம் தானா? போன்ற விஷயங்களை எல்லாம் நாம் கவனத்தில் கொண்டே ஆக வேண்டும் என்கிற விழிப்புணர்வைத் தரும் விதத்தில் இந்தப்படம் இருக்கும் என்கிறார் நாயகனும், படத்தின் கதையை எழுதியவருமான நேதாஜி பிரபு. படத்தில் அவருக்கு ஜோடியாக அவருக்கு ஜோடியாக சமைரா நடித்திருக்கிறார்.

”ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவில் பெருகி வரும் சர்க்கரை நோயாளிகளின் பர்ஸை குறி வைத்து மருந்து நிறுவனம் ஒன்று வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தை இறக்குமதி செய்து அதை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துடன் கலந்து இந்தியாவில் விற்பனை செய்கிறது. மருந்து நிறுவனத்துக்கோ கோடிக்கணக்கில் பணம் கொட்ட, அதை வாங்கி உண்ட மக்களுக்கோ இதய நோய், சிறு நீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, புற்று நோய் என நோய்களின் தாக்கம் அணிவகுக்கிறது.

மருந்து கம்பெனிகளின் இந்த அட்டூழியத்துக்கு எதிராக நாயகன் நேதாஜி பிரபு சாட்டையைச் சுழற்றுகிற மிச்ச சொச்சங்களைத்தான் ஆக்‌ஷன், காமெடி, லவ், த்ரில்லர் என கமர்ஷியலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்” படத்தின் இயக்குனர் ரமணி. இவர் பிரபல மலையாள இயக்குனர் சி.வி.சந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மருந்துகளின் பாதிப்பைச் சொல்ல வேண்டுமென்றால் அந்தக் கம்பெனியில் படப்பிடிப்பு இல்லாமலா? நிஜமாகவே மருந்து தயாரிக்கும் நிறுவனத்துக்குள் ஒன்றில் முறையாக அனுமதி பெற்று அங்கு நடக்கிற விதிமீறல்களை படமாக்கியிருக்கிறார்கள். ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்ய வி.தஷி இசையமைத்திருக்கிறார். ரெட் சில்லி பிளாக் பெப்பர்ஸ் சினிமாஸ் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்திருக்கும் இப்படத்தை சீபா அசோசியேட்ஸ் சார்பில் கீழக்கரை எஸ்.அஜ்மல்கான் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியிடுகிறார்.