இளையராஜா ரசிகர்களே… : இந்த ஜேம்ஸ் வசந்தனை மன்னித்து விடுங்கள்!
கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவிடம் பீப் சாங் குறித்து கருத்து கேட்டார் சத்தியம் டிவி நிருபர்.
அவ்வளவு தான் கோபத்தின் உச்சிக்கே சென்றார் இளையராஜா. உனக்கு அறிவிருக்கா? அதைப் பத்தி கேட்கிற இடமா இது என்று ஆரம்பித்து உனக்கென்ன தகுதி என்கிற ரேஞ்சில் வார்த்தைகள் வந்து விழ கடந்த ஒரு வார காலமாக பீப் சாங்கோடு இளையராஜாவைப் பற்றிய இந்த சர்ச்சையும் சமூக வலைத் தளங்களில் வறுவல் ஆனது.
திரையுலகில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் கருத்துகளைச் சொல்ல அதில் தானாக வந்து சிக்கிக் கொண்டவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
“ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்” என்பது தான் அவர் சொன்ன கருத்து.
அவ்வளவு தான் ஏற்கனவே கொதிப்பில் இருந்த ராஜாவின் ரசிக கண்மணிகள் கேள்வி கேட்ட நிருபரை விட்டுவிட்டு கருத்து சொன்ன ஜேம்ஸ் வசந்தனை பிடிபிடிக்க ஆரம்பித்தார்கள்.
இதுக்கு மேலும் தாங்காதுப்பா போதும் என்கிற ரேஞ்சில் நொந்து போன ஜேம்ஸ் வசந்தன் இந்த சர்ச்சைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
”சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், என்னுடைய இந்தக் கருத்தால் காய முற்ற ராஜா சாருடைய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதற்காகவும் தான் இந்த அறிக்கை.
இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும், படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.
இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்து கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண்படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். என்று கும்பிடு போட்டிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
இளையராஜா ரசிகர்களே…? : ஜேம்ஸ் வசந்தனை மன்னிச்சிடுங்க…