விஜய்ன்னு பேர் வெச்சாலே சூப்பர் ஹீரோ ஆயிடுவாங்க – விஜய் ஆண்டனிக்கு ராதிகா பாராட்டு
‘எமன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து ரீலீசாகவிருக்கும் படம் அண்ணாதுரை.
ராதிகாவின் ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர்கள் வசந்தபாலன், சுசீந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சீனிவாசன் இயக்கியிருக்கிறார். வருகிற நவம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு ராதிகா பேசியதாவது ”விஜய் ஆண்டனியை நான் தான் என்னுடைய கம்பெனியில் அறிமுகப்படுத்தினேன். அவர் இசையமைப்பாளர் என்பது தெரியும், ஆனால் நன்றாக நடிப்பார் என்பதை ‘பிச்சைக்காரன்’ படம் பார்த்து வியந்து விட்டேன். வெறுமனே நடிக்க வேண்டும் என்றில்லாமல் கதையை தேர்ந்தெடுக்கும் விதத்திலும் அவரிடம் உண்மை இருப்பதை தெரிந்து கொண்டேன்.
என்னுடைய கணவர் சரத்குமாருக்காக வந்த கதை தான் இந்த ‘அண்ணாதுரை’. ஆனால் இந்த கதையில் என்னை விட விஜய் ஆண்டனி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை ரெகமெண்ட் செய்தது என் கணவர் தான். அதற்கு பிறகு இந்த கதையை அவரை கேட்க வைத்து அதை நாங்கள் இணைந்து தயாரிக்க முடிவு செய்தோம்.
ஒவ்வொரு படத்திலும் தன்னை அவர் மெருகேற்றிக் கொண்டே வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இந்த விஜய் ன்னு பேர் வெச்சிருக்கிறவங்க பார்க்கிறதுக்கு பூனை மாதிரி அமைதியா இருப்பாங்க, அப்புறமாப் பார்த்தா இன்னொரு பரிமாணம் எடுத்துடுவாங்க. இந்த படத்தில் நிறைய பாசிட்டீவ்வான விஷயங்கள் இருக்கிறது. எப்போதுமே பாசிட்டிவான விஷயங்கள் கை கொடுக்கும். அந்த வகையில் நல்ல கதைகளை தேர்வு செய்து வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனிக்கு இந்த படமும் வெற்றிப் படமாக அமையும்” என்றார்.